’சாலா’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’சாலா’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் படமாக இருந்தாலும், கமர்ஷியல் மசாலாப் படமாக வெளியாகியிருக்கும் ‘சாலா’ மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
மதுக்கூடம் நடத்தும் நாயகன் தீரனுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மா வெங்கடேஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, அதுவே ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே கெளரவமாக கருதப்படும் மதுக்கூடம் ஒன்றை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, அந்த மோதலின் விளைவுகளையும், மதுப்பழக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளையும் பாடம் எடுப்பது போல் மட்டும் இன்றி கமர்ஷியல் பட ரசிகர்கள் கொண்டாடும்படியும் சொல்வது தான் ‘சாலா’.
சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் தீரன் இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும், குழந்தைத்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருப்பவர், நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட தீரன், நடிப்பில் மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் கோலிவுட்டில் தொடர்ந்து நாயகனாக பட்டய கிளப்பலாம்.
நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான வேடம், அதை புரிந்து நடித்திருக்கிறார். காதல் காட்சிகள் இல்லை என்றாலும் நாயகனின் மனதில் இடம் பிடித்தது போல் தனது போராட்ட குணத்தால் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத் வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகனின் நண்பராக வரும் ஸ்ரீநாத் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. அருள்தாஸ், சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் மூன்று பேர் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
தீசன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருப்பதோடு, பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் பணி அளவு. படத்தொகுப்பாளர் புவன், மசாலா படம் என்றாலும் இயக்குநர் சொல்ல நினைத்த விசயங்களை மக்களின் மனங்களில் கொண்டு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க நாயகனை சுற்றி நகரும் கமர்ஷியல் படம் என்றாலும் அதில் மக்களுக்கான நல்ல விசயத்தை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.மணிபால். தற்போதைய காலக்கட்டத்தில் மதுவினால் மக்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை நகைச்சுவையாக மட்டும் இன்றி யோசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படி அடிமையாகி கிடக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால், மூன்று பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நிலை, அவர்கள் மூலம் உருவாக்கப்படும் வீடியோ ஆதாரம், போன்றவற்றால் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
இறுதியில் இடம்பெறும் விபத்துக்காட்சி ஒட்டு மொத்த திரையரங்கையே அதிர்ச்சியடைய செய்வதோடு, மதுவினால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் பற்றியும் நினைக்க வைப்பதோடு, மது அருந்துபவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறது.
நாட்டுக்கு தேவையான ஒரு படத்தை ஜனரஞ்சகமான முறையில் கொடுத்து தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்திருக்கும் இயக்குநர் எஸ்.டி.மணிபால் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.