"சிறகு" திரைப்பட குழுவிற்கு ஏ.ஆர் ரகுமான் கொடுத்த மாபெரும் பலம்
ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வை கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், "தனிமைச் சிறகினிலே" என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது. அந்தப் பறத்தலின் பயணம் அடுத்தக்கட்டத்தை அடையும் விதமாக படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.
பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அரோல் கொரேலி இசை அமைத்துள்ளார். படம் தாங்கி நிற்கும் கதைக்கு இசை உயிர் கொடுத்துள்ளது என்று தெரிகிறது.
மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்கள் மூலமாக நன்கு பரிச்சயமான நாயகன் ஹரி கிருஷ்ணன் தான் சிறகின் கதாநாயகன். யோகா, நடனம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் அக்ஷிதா நாயகியாக நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா, காளிவெங்கட் நடித்துள்ளனர். பியார் பிரேமா காதல் படம் மூலம் ஒளிப்பதிவில் தனித்தன்மை காட்டிய ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட அருண்குமார் வி. எஸ் சிறகின் எடிட்டர்.
இசையும் பயணமும் கொண்ட இப்படத்தின் கதையும் காட்சி அமைப்பும் நிச்சயம் நம்மை இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் இளைப்பாறச் செய்யும் என்றே தெரிகிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட டீசர் மாஸ்டர் ஹிட் அடித்து வருவது படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது!