பொங்கல் திரைப்பட சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்த திரையரங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்குமீண்டான்பட்டி கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு 225 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் பரமசிவம், முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் செல்லக்குருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசு பொங்கல் திரைப்படங்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை, சில தவறான தகவல் மற்றும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு காரணமாக சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு காட்சி ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 50,000 அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி மீறி சிறப்புக் காட்சி ஒளிபரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்ய அனுமதி கேட்டால் பரிசீலனை செய்யப்படும் என்றும், அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வரும் சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்,திரையரங்கில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது, வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என்று ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது, இதற்கு நிரந்தர தீர்வு காண ஒரு குழு அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்றும், பொங்கல் பரிசு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் மூலம் எல்லாவற்றிலும் அரசியல் செய்வது யார் ? என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது, பொங்கல் பரிசினை மக்கள் எழுச்சியுடன் ஆர்வத்துடன் வாங்கி வந்த நிலையில் தடை என்பதால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். இதற்கு காரணம் யார் என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நல்ல திட்டங்களையும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களையும் தடுக்கின்றனர் .இதுதான் எதிர்க்கட்சியின் வேலை என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது. அதிமுக தேர்தல் கூட்டணி தொடர்பாக தம்பிதுரை தெரிவித்து அவரது சொந்த கருத்து, அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் அதிகாரம் இல்லை கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு முன்பு எடுப்பார்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது, விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின்பு ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரும் என்றார்.