’கண்ணப்பா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கண்ணப்பா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
வேடர் குலத்தில் பிறந்து கடவுள் என்பதே இல்லை, சாமி சிலைகள் அனைத்தும் வெறும் கற்கள் மட்டுமே, என்ற மனநிலையில் இருந்த திண்ணன் என்பவர் மிகச்சிறந்த சிவபக்தர் கண்ணப்பராக உருவெடுத்தது எப்படி? என்ற கண்ணப்பரின் பக்தியின் ஆழத்தை உணர்த்துவது தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் கதைக்கரு என்றாலும், சிவபக்தராவதற்கு முன்பு திண்ணனாக இருந்த அவரது வாழ்க்கை, அதில் வரும் காதல், திருமணம், கடவுள் மறுப்பு கொள்கை என இதுவரை வெளியான கண்ணப்பர் பற்றிய படங்களில் சொல்லப்படாத பல அறிய விசயங்களை மிக பிரமாண்டமான முறையிலும், வியக்கத்தக்க முறையிலும் சொல்லியிருப்பதோடு, கடவுள் பக்தியை உணர்வுப்பூர்வமாகவும் சொல்வதே ‘கண்ணப்பா’.
கண்ணப்பர் கதை தெரிந்தவர்களுக்கு இப்படம் திரை விருந்தாக இருக்கும், தெரியாதவர்களுக்கு இப்படியும் ஒரு பக்தரா! என்ற ஆச்சரியத்தை தருவதோடு, ஆன்மீகம் என்றால் என்ன ?, இறை பக்தி என்றால் என்ன ? என்பதை மிக எளிமையான முறையில் மிக ஆழமாக புரிய வைக்கவும் செய்யும்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, கடவுள் மறுப்பாளராக புரட்சிகரமான வசனங்கள் பேசுவது, போர் வீரராக அவர் எய்தும் அம்பு போல் வேகமாக செயல்படுவது, காதல் வயப்பட்டு மயங்குவது, சிவபக்தராக மாறி பக்திபரவசத்தில் உருகுவது என திண்ணன் மற்றும் கண்ணப்பர் உருவங்களை தனது நடிப்பு மூலம் பார்வையாளர்கள் கண்முன் நிறுத்துகிறார். திண்ணனாக கடவுளை வெறுக்கும் போது வெளிப்படுத்தும் நடிப்புக்கும், கண்ணப்பராகி பக்தியில் உருகும் போது வெளிப்படுத்தும் நடிப்பிலும் வெகுவாக வித்தியாசங்களை காட்டி உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சுவின் கடினமான உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் கண்கள் பேசுகிறது, உருவம் கவர்ந்திழுக்கிறது, நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில், புராணக்கதைகளில் வரும் கற்பனை பெண் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் அழகு.
கடவுளும், பக்தியும் தங்களுக்கானது என்று தற்போதைய காலக்கட்டத்திலும் தம்பட்டம் அடிக்கும் சமூகத்தை கோடிட்டு காட்டக்கூடிய மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, கதாபாத்திரத்திற்கான கம்பீரம் மற்றும் ஆணவத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராத்தா என்ற வேடர் குல வீரராக நடித்திருக்கும் மோகன்லாலின் திரை இருப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர் பேசும் வசனங்கள் அனைத்தும், அகந்தையில் திரியும் மனிதர்களுக்கு அறிவுரைகள்.
ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ், திரையரங்குகளில் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைப்பது உறுதி. அவர் வரும் ஒவ்வொரு ஃபிரேம்களும் ஆன்மீகவாதிகளுக்கு மெய்சிலிர்க்க வைப்பதோடு, ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் இருக்கிறது.
குறிப்பாக விஷ்ணு மஞ்சுவும், பிரபாஸும் பேசிக்கொள்ளும் திருமணம் பற்றிய வசனங்கள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும், மோகன் பாபு மற்றும் பிரபாஸ் இடையிலான உரையாடல்கள் கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு அகந்தையில் இருப்பவர்களுக்கு சாட்டையடியாக இருக்கும்.
சிவனாக நடித்திருக்கும் அக்ஷய் குமார் மற்றும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் பொருத்தமான தேர்வு.
விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்திருக்கும் சரத்குமார், முதுமையான தோற்றத்திலும் இளமையாக இருக்கிறார். அளவாக நடித்திருக்கும் அவர் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஐந்து குடிகளில் ஒரு குடியின் தலைவராக சந்துடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத்ராம், படம் முழுவதும் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவின் கேமரா நியூசிலாந்தின் இயற்கை அழகையும் ஒரு கதாபாத்திரமாக திரைக்கதையோடு பயணிக்க வைத்திருக்கிறது. எது உண்மை, எது வி.எப்.எக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாதபடி நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கும் ஷெல்டன் சாவ், அழகான லொக்கேஷன்கள் மற்றும் பிரமாண்டமான போர்க் காட்சிகளுக்கு மட்டும் இன்றி கண்ணப்பாவின் உணர்வுக்கும் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை படமாக்கி அதை ரசிகர்களிடம் கத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகங்கள். அதிலும், இயற்கையின் சொர்க்கமாக இருக்கும் அழகிய லொக்கேஷன்களோடு அந்த பாடல்களை கேட்கும் போது நமக்கும் சொர்க்கத்தில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையில் குறை இல்லை என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை.
படத்தொகுப்பாளர் ஆண்டனி, படத்தின் இயக்குநரை விட கடுமையாக உழைத்திருப்பது கதை நகர்த்தலில் தெரிகிறது. காதல், யுத்தம், பக்தி இவை மூன்றையும் மக்கள் மனதில் நிற்கும் வகையில் சொல்ல வேண்டும் என்ற சவாலை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர், ஆடை வடிமைப்பாளர், கலை இயக்குநர் மற்றும் வி.எப்.எக்ஸ் பணியாளர்கள், ஒப்பனை கலைஞர்கள் என அனைவரது உழைப்பும் திரையில் தெரிகிறது.
இதுவரை திரையில் சொல்லப்பட்ட கண்ணப்பர் கதையை கதை, திரைக்கதை ஆசிரியராக புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் விஷ்ணு மஞ்சு, திரை மொழியில் பிரமாண்டமாக சொல்வதற்கான அம்சங்களோடு கதையை கையாண்டிருந்தாலும், கண்ணப்பரின் பக்தியின் ஆழத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் கண்ணப்பர் என்ற சிவபக்தரின் பக்தியின் ஆழத்தை வெளிக்காட்டும் ஒரு படமாக இருந்தாலும், பக்தி என்ற பெயரில் மூடப்பழக்கங்களில் மூழ்கியிருப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் காட்சிகளை வைத்திருப்பது பாராட்டக்குரியது.
ஆன்மீக படம் என்றாலும் அதை திரை மொழியில் சொல்லும் போது பிரமாண்டமான படைப்படாகவும், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான திரையரங்க உணர்வை கொடுக்கும் ஒரு திரப்படமாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் முகேஷ் குமார் சிங்.
படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பது போல் தோன்றினாலும், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் இதுவரை பார்த்திராத அழகிய லொக்கேஷன்கள், கதாபாத்திரங்கள் ஆகியவை அதை மறக்கடித்து படத்துடன் நம்மை ஒன்றிவிட செய்கிறது.
ஆன்மீகப் படத்தை அறிவுப்பூர்வமாக சொல்லி, ஆன்மீகவாதிகளை மட்டும் இன்றி அனைத்து மக்களும் பார்க்க கூடிய ஒரு சிறந்தை படைப்பாக ‘கண்ணப்பா’-வை கொடுத்திருக்கும் படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.