ஷாருக் கான்-கஜோல் படம் மீண்டும் திரைக்கு வருகிறது
ஷாருக் கான்-கஜோல் படம் மீண்டும் திரைக்கு வருகிறது
ஷாருக் கான்-கஜோல் நடிப்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான காதல் அம்சம் கலந்த இந்தி திரைப்படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே. யாஷ்ராஜ் சோப்ரா தயாரிப்பில், ஆதித்யா சோப்ரா முதன்முதலாக இயக்கிய இந்த திரைப்படம் ரூ.4 கோடி செலவில் உருவானது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் ரூ.89 கோடியும், சர்வதேச சந்தையில் ரூ.13.50 கோடியும் என உலகம் முழுவதற்கும் ரூ.102.50 கோடி வரை வசூல் செய்தது.
இந்தி திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல சாதனைகளையும் படைத்துள்ளது. வெளியான நாளில் இருந்து, இடையில் நிறுத்தப்படாமல் திரையரங்கில் படம் தொடர்ந்து ஓடியது. இதனால் நீண்ட காலம் திரையில் ஓடிய திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்தது.
கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதி இந்த படம் திரைக்கு வந்தது. இந்த ஆண்டுடன் படம் 25 ஆண்டுகள் பூர்த்தி செய்தது. 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, படத்தில் இடம்பெற்ற ராஜ் மற்றும் சிம்ரன் என்ற கதாபாத்திரங்களின் பெயர்களையே தங்களது டுவிட்டர் முகப்பு பெயர்களாக கான் மற்றும் கஜோல் மாற்றினர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் முதல் மராட்டியத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது. இதில் நேற்று முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளிவராதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
அடுத்த வாரத்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக படங்கள் திரையிடப்படும் என கூறப்படுகிறது. புது படங்கள் வெளியாகாவிட்டால் பழைய திரைப்படங்களையே வெளியிடுவது என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஷாருக் கான்-கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் திரைக்கு வருகிறது. மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் இந்த படம் இன்று முதல் வெளிவரவுள்ளது.