கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகும் "காந்தகம்"
கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகும் "காந்தகம்"
-------------------------------------------------------------------------
உண்மை சம்பவங்களுடன் கொஞ்சம் கற்பனை கலந்து சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகும் திரில்லர் படம், "காந்தகம்". இந்தப் படத்தை கிங் ஸ்கார்பியன் ப்ரோடுக்ஷன் என்கிற நிறுவனம் தயாரிக்க, எழுதி-இயக்கி-கதாநாயகனாக நடிக்கிறார், விசுவநாத். கதாநாயகியாக சமிதா நடிக்கிறார். 'சித்தா' படத்தின் வில்லன் தர்ஷன், உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்கிறார், ராகவ ஹரி கேசவா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மூணாறு போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடந்துள்ளது. கதைக்கு தேவையான யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்திடாத ஆபத்தான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேஷியாவில் நடைபெற உள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநரும், கதாநாயகனுமான விசுவநாத் கூறுகையில், "உலகம் முழுவதும் வெளியாகும் கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது, கிரைம் திரில்லர் திரைப்படங்கள் தான் பார்வையாளர்களை படம் தொடங்கியது முதல் முடியும் வரை சீட்டின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கிறது.
அப்படி நல்ல அனுபவம் கொடுக்கும் சிறந்த கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் இந்த காந்தகம் படத்தை எடுத்து வருகிறேன். இந்தப் படத்தின் கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று தகவலை அடிப்படையாக வைத்து உருவாக்கி இருக்கிறேன். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களுக்கும் உள்ள தொடர்புகளை அனைவருக்கும் புரியும் படி நேர்த்தியாகவும் ஸ்டைலிஷாகவும் படமாக்கி வருகிறேன். சிக்கலான கதை. இதுவரை யாரும் சொல்லாத திரைக்கதை. பரபரப்பான சம்பவங்கள், விறுவிறுப்பான காட்சிகள் என்று அனைவரையும் கவரும் விதமாக படம் இருக்கும்..." என்று தெரிவித்துள்ள இயக்குனர் விசுவநாத், விரைவில் வெளிவர இருக்கும் 'மலைகளின் இளவரசி' என்கிற படத்தையயும் இயக்கி இருக்கிறார்.