ரஜினிகாந்த் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்

ரஜினிகாந்த் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்
Actor Rajnikanth should support PMK Says Anbumani Ramadoss

கோவை: பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

கோவையில் அத்தியாவசிய பொருட்களான மின் மோட்டாருக்கு மத்திய அரசு 3 விதமான வரிகளை போடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டும் அல்லாமல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் இதையெல்லாம் கேட்க வேண்டிய தமிழக அரசு கையாளாகாத அரசாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகளை பற்றி இப்போது அரசு பேசுவதில்லை. இங்கிருந்து டெல்லி சென்றால் அவர்களது வழக்கு பற்றித்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் மிக மோசமான சுழல் தற்போது உள்ளது.

5 லட்சத்து 74 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு கடன் உள்ளது. நிர்வாக கடனாக மட்டும் 3¼ லட்சம் கோடி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயரும். தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் அது 1 லட்சத்து 40 ஆயிரமாக உயரும்.

1947 முதல் 2011 வரை தமிழ்நாட்டின் மொத்த கடனே 1 லட்சத்து ஒரு ஆயிரம் கோடியாக இருந்தது. 2011-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அடுத்த 6 ஆண்டுகளில் மட்டும் 3¼ லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியில் இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கியது தான். வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிதி இல்லை. தமிழ்நாட்டில் வறட்சி, விவசாயம், நீட், கல்வி கொள்கை என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால் இதைப்பற்றி 50 ஆண்டு கால ஆட்சியில் எந்த தீர்வும் இல்லை.

எனவே மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும் போது கொள்ளையடித்தாலும் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது. தற்போதைய முதல்- அமைச்சரால் எந்த அமைச்சரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் பக்கம் 10 எம்.எல்.ஏக்களை வைத்து கொண்டு மிரட்டுகிறார்கள். மேட்டூர் அணையில் தூர்வாரிய மண்ணை விவசாயிகளிடம் கொடுப்பதற்கு கூட அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்.

ரஜினிகாந்த் சிறந்த நிர்வாகி என என்னை கூறியிருக்கிறார். ஒரு நடிகரால் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது. எனவே ரஜினிகாந்த் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தனியார் பால் கலப்பட விவகாரத்தில் அமைச்சரின் பேச்சு அவரது தகுதியில்லாததை காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Actor Rajnikanth should support PMK Says Anbumani Ramadoss