சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்
Jayam Ravi tasted a huge success with Sakalakala Vallavan

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சகலகலா வல்லவன். காதல் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி முதன் முதலாக ஒரு முழு நீள காமெடி படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் ஜெயம் ரவி சூரியுடன் பகை, அஞ்சலியுடன் காதல், என கலகலப்பாக நகர்கிறது. எதிர்பாராத விதமாக ஜெயம் ரவிக்கும், திரிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. சிட்டி பொண்ணான திரிஷாவுக்கும், கிராமத்து பையனான ரவிக்கும் ஒத்துவராமல் போக, இருவரும் பிரிய முடிவெடுக்கிறார்கள்.

விவாகரத்து வாங்குவதற்காக கிராமத்திற்கு வரும் த்ரிஷா ஜெயம்ரவியின் குடும்பம் சார்பாக தேர்தலில் நிற்கிறார். இவர்களுக்கு எதிராக, சூரியின் குடும்பம் சார்பாக அஞ்சலி நிற்கிறார். தேர்தலில் காதலி ஜெயித்தாரா, மனைவி ஜெயித்தாரா. திரிஷா விவாகரத்து வாங்கினாரா, ஜெயம் ரவியுடன் சேர்ந்தாரா என்பதை வயிறு குலுங்க குலுங்க நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ரோமியோ ஜூலியட்டில் சிட்டி பையனாக வந்த ஜெயம் ரவி, சகலகலா வல்லவனில் கிராமத்து இளைஞனாக வந்து, முழுக்க முழுக்க நகைச்சுவை நாயகனாகி இருக்கிறார்.. இப்படியும் தன்னால் முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க முடியும் என நிரூபிக்கிறார்.

காமெடி, காதல், செண்டிமண்ட், ஆக்ஷன் என இறங்கி அடித்திருக்கிறார் ஒரு மெகா சிக்ஸர். அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு தமிழ்படத்தில் நடித்திருக்கிறார். கிராமத்து பெண்ணாக, திரையில் ஜெயம் ரவியின் மனசையும், பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையும் கொள்ளையடிக்கிறார். தெரியும் தெரியாது என இரண்டு வார்த்தைகளை வைத்து கொண்டு ஜெயம் ரவியும், அஞ்சலியும் ஆடும் காதல் கலாட்டாக்களில், சூரி மாட்டிக்கொண்டு முழிப்பது அக்மார்க் காமெடி.

சூரி காமெடியில் கலக்கியிருக்கிறார். சூரி தன் திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறார் என்பதற்கு இப்படம் ஒரு சான்று. பொதுவாக சுராஜ் படங்களில் காமெடிக்கும், காமெடியனுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்படத்தில் சூரி காமெடியில் ஒரு மகுடமே சூட்டியிருக்கிறார்.

த்ரிஷா கோபம், வெறுப்பு, அடக்கம், இயலாமை, ஆதங்கம் என அத்தனை முகபாவங்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வெறும் பாடல்களுக்கு மட்டுமே வராமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் வந்து ஸ்கோர் செய்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு த்ரிஷா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் விவேக். போனசாக இன்னொரு விவேக். அவரது அறிமுக காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. தான் இன்னும் நகைச்சுவையில் கிங் என்பதற்கு அந்த அறிமுக காட்சியில் வரும் ஆடியன்ஸின் ஆரவாரமே சாட்சி. இரண்டு மனைவிகளுடன் அண்ணன் விவேக்கும், நீண்ட நாட்களாக திருமணமே ஆகாமல் தம்பி விவேக்கும் செய்யும் காமெடி கலாட்டக்களுக்கு பஞ்சமே இல்லை..

நான்கடவுள் ராஜேந்திரன் வெறும் ஒரு காமெடியனாக மட்டும் இல்லாமல், கதைக்கு உதவும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் உலா வந்திருக்கிறார். ஜெயம் ரவி திரிஷாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது நடிப்பில் ஜெயிக்கிறார். மேலும் பிரபு, ரேகா, ராதாரவி, ஜான் விஜய், கும்கி அஸ்வின், பிளாக் பாண்டி, தளபதி திணேஷ், சித்ரா லட்சுமணன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கதைக்கு வலு சேர்க்கிறார்கள்

பூர்ணா ஒரு பாடலுக்கு வந்து ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறார். கிராமத்து இயற்கையை தன் கேமரா மூலம் அள்ளி தெளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் UK செந்தில்குமார். இசையில் அதிரடி காட்டி இருக்கிறார் தமன். பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கும் ரகம்.

முழு நீள காமெடி படத்தை தொய்வில்லாமல் தோரணங்களாக கட்டியிருக்கிறார் செல்வா RK. ”தமிழ்நாட்டுல பொறந்துட்டு இங்கிலீஸ் தெரியலங்கிறது அவமானம் இல்லடா, தமிழ் தெரியலங்கிறது தான் அவமானம்”, “லவ் மேரேஜ் பெட்டரா அரேஞ்ச் மேரேஜ் பெட்டரா..? சாகனும்னு முடிவு பண்ணிட்டா, தூக்கு மாட்டி செத்தா என்ன, தூக்க மாத்திர போட்டு செத்தா என்ன” என படம் முழுவதும் கிளாப்ஸ்களை அள்ளும் வசனங்கள்.

வழக்கமாக ஆக்ஷன் மசாலாக்களில் பயணிக்கும் சுராஜ், தனக்கு எப்போதும் கை கொடுக்கும் நகைச்சுவையுடனும், குடும்ப பிண்ணனியிலும் இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கையாண்டு, அதற்கான தீர்வை தித்திக்கும் மருந்தாக கொடுத்திருக்கிறார்கள்.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பில், சுராஜின் சகலகலா வல்லவன் குடும்பத்துடன் பார்க்க கூடிய, நகைச்சுவை வெற்றிப்பட வரிசையில் அமர்கிறது.

Jayam Ravi tasted a huge success with Sakalakala Vallavan